சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லந்தோறும் மூவர்ணக்கொடி என்ற மக்கள் இயக்கத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லந்தோறும் மூவர்ணக் கொடி என்ற பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கியுள்ளார்.
இதனை பின்பற்றும் விதமாக புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இல்லந்தோறும் மூவர்ணக் கொடி என்ற மக்கள் இயக்கத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், சட்டப்பேரவை துணை தலைவர் ராஜவேலு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் ஐந்து பேருக்கு துணைநிலை ஆளுநர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். விழாவில், தேசப்பற்று, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கக் கூடிய வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் “ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி” உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.