இந்திய பாரம்பரியத்தை அறிந்துகொள்ளும் விதமாக மத்திய பிரதேசத்தில் கல்லூரி மாணவர்களின் பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் எழுதிய புத்தகங்களை சேர்க்க வேண்டுமென மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், ஆர்எஸ்எஸ் தலைவர்களான சுரேஷ் சோனி, தினநாத் பத்ரா, டி. அதுல் கோதாரி, தேவேந்திர ராவ் தேஷ்முக், சந்தீப் வசேல்கர் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் உள்பட 88 புத்தகங்களை வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், 88 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பை தாமதமின்றி கல்லூரி நிர்வாகங்கள் விரைவில் வாங்கி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதைத்தவிர்த்து மாணவர்களுக்கு இந்த புத்தகங்கள் குறித்து விளக்கிச் சொல்ல, அனைத்து கல்லூரிகளிலும், பாரதிய ஞானப் பரம்பரா பிரகோஷ்தா எனப்படும் பாரம்பரிய அறிவை கற்றுத்தரும் களம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின்படி இந்திய அறிவுப் பாரம்பரியத்தை மாணவர்கள் அறியும் விதமாக இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச மாநில உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.