கன்னியாகுமரியில் பொற்றை மலையை உடைத்து தகர்ப்பதால் ஆறு கிராமங்களுக்கு நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பொற்றை மலையை சுற்றி புலயன்விளை, கிழங்குவிளை, கொழிஞ்சிவிளை, காவுவிளை, கடமனங்குழிவிளை, மேடவிளை ஆகிய ஆறு கிராமங்கள் அமைந்துள்ளன.
இங்கு ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று, பொற்றை மலையை உடைத்து லாரிகள் மூலம் மண் மற்றும் கற்களை அள்ளிச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதனால் இந்த மலையை சுற்றியுள்ள கிராமங்களில் தற்போது மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள மண் குவியலை அகற்றக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வயநாட்டை போல அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.