சனாதன தர்மம் விவகாரம் தொடர்பான வழக்குகளை தமிழகத்தில் விசாரிக்க வேண்டும் எனும் அமைச்சர் உதயநிதியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி, சனாதனத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டதோடு, அதனை ஒழிக்க வேண்டும் என பேசினார்.
இதனையடுத்து அவருக்கு எதிராக உத்தர பிரதேசம், பீகார், மகராஷ்டிரா, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
இது தொடர்பான வழக்குகளை தமிழகத்தில் விசாரிக்க வேண்டும் எனக் கோரி, உதயநிதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது உதயநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், பெங்களூரு நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு முறை தாக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பயமும் உள்ளதாக தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், அனைத்து முதல் தகவல் அறிக்கையும் வெவ்வேறு குற்றங்கள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் தனியாகவே விசாரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.
மேலும் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிபதிகள் விலக்கு வழங்கினர்.
பின்னர் இந்த வழக்கை வரும் நவம்பர் 18-ம் தேதிக்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.