அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் கூகுளுக்கு எதிரான போட்டி சந்தை அவசியம் என்றும், நுகர்வோர் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வேறு ஆப் ஸ்டோர்களுக்குச் செல்ல கூகுள் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூகுள் மீதான குற்றச்சாட்டு என்ன ? இதுநாள் வரை கூகுள் நிறுவனம் எப்படியெல்லாம் தந்திரமாக பன்மடங்கு லாபம் சம்பாதித்து வந்தது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் இல்லாமல் எந்த செயலும் இல்லை என்ற அளவுக்கு கூகுள் மக்கள் வாழ்வில் ஒன்றாக கலந்து இருக்கிறது.
ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள ஆப்ஸ் மற்றும் ஆப்ஸ்-இன்-ஆப் பொருட்களை விற்பனை செய்வதில் ஏகபோக உரிமையை கூகுள் மட்டுமே வைத்திருக்கிறது.
விற்பனையைப் பாதுகாக்க ஒரு எதேச்சதிகாரப் போக்குடன் சட்டவிரோதமான தந்திரங்களிலும் ஈடுபட்டதாகவும், அதன் மூலம் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து வரம்புக்கு மீறிய அதிக லாபத்தை ஈட்டியதாகவும் குற்றச் சாட்டுக்கள் எழுந்தன.
மேலும், ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள ஆப்ஸ் போன்ற பயன்பாடுகளில் கட்டணக் கருவிகளைப் பயன்படுத்துவதையும், டிஜிட்டல் பொருட்களின் விற்பனையில் 30 சதவீதம் வரை தனக்கு வழங்குவதையும் கூகுள் சட்டவிரோதமாகக் கட்டாயப்படுத்தி வந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் நீண்ட காலமாகவே கூறப் பட்டு வந்தது.
இந்நிலையில் தான், கூகுளுக்கு எதிரான உரிமைகோரல் வழக்கை Fortnite” வீடியோ கேம் தயாரிப்பாளரான எபிக் கேம்ஸ், கொண்டு வந்தது. இந்த கூகுள் ப்ளே ஸ்டோர் நம்பிக்கை இன்மை வழக்கு, அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடந்து வந்தது.
கூகுள் ப்ளே ஸ்டோருக்கு வெளியே டெவலப்பர்கள் தங்கள் ஆப்ஸை சுதந்திரமாக விநியோகம் செய்யும் திறனை கூகுள் சட்டவிரோதமாக தடுத்ததாகவும், செயலிகளில் உள்ள பரிவர்த்தனைகளுக்கு பணம் செலுத்துவதில் அதிக இறுக்கமான பிடியை வைத்திருப்பதாகவும் சமர்பிக்கப் பட்ட ஆதாரங்கள் மூலமாக நீதிபதிகள் கண்டறிந்தனர்.
இதன் அடிப்படையில்,கடந்த டிசம்பரில் அமெரிக்க நடுவர் மன்றம் நான்கு வாரங்களாக விசாரணை நடத்தி, ஆண்ட்ராய்டு மொபைல் பிளாட்ஃபார்மில் உள்ள பயன்பாடுகளுக்கான கேட் கீப்பராக, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கூகுள் Play Store சந்தையில் தன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது என தெரிவித்தது.
உடனடியாக மற்ற பயன்பாட்டாளர்களுக்கும் Play Store-யை சந்தைப் போட்டிக்கு வசதியாக திறக்குமாறு கூகுளுக்கு நடுவர் மன்றம் வலியுறுத்தி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் நீதிமன்றத்தில் கடந்த புதன் கிழமை மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
மூன்று மணி நேர விசாரணையின் போது, அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜேம்ஸ் டொனாடோ, கூகுளின் ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோரில் பெரிய மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்க இருப்பதாக கோடிட்டு காட்டி இருக்கிறார்.
மறுசீரமைப்பு பயனர்களுக்கு மாற்று ஆப் ஸ்டோர்களைப் பதிவிறக்குவதற்கான விருப்பத்தை வழங்குவதற்கு Google இன் Play Storeக்கு தேவைப்படும் விதிமுறைகளை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
நீதிபதியின் இறுதி உத்தரவின் நோக்கத்தைப் பொறுத்து, மறு சீரமைப்புக்காக கூகுளுக்கு 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகலாம் என்று கணிக்கப் பட்டுள்ளது.
மேலும் நீதிபதி ஜேம்ஸ் டொனாடோ Play Store வழக்கில், மாற்றங்களைச் செயல்படுத்த கூகுளுக்கு எவ்வளவு கால அவகாசம் வழங்குவது மற்றும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் எவ்வளவு காலம் அமலில் இருக்க வேண்டும் என்பது பற்றியும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்ட்ராய்டு ஆப்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு வழிவகுக்கும் இந்த முடிவு நுகர்வோர் மற்றும் ஆப்ஸ் டெவலப்பர்கள் இருவரையும் ஒருவகையில் பாதிக்கலாம் என்று தொழில் நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இன்னொரு நீதிபதி, கூகுள் தேடுபொறியையும் சட்டவிரோத ஏகபோகம் என்று அறிவித்திருக்கிறார். மேலும் இது குறித்த வழக்கு விசாரணைகள் வரும் செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும் தெரியவருகிறது.
ஏற்கெனவே எபிக் கேம்ஸ், ஆப் ஸ்டோரில் ஆப்பிளுக்கு எதிராகவும் இதேபோன்ற ஒரு நம்பிக்கையற்ற வழக்கை தொடர்திருந்ததும், அந்த வழக்கில் ஆப்பிள் நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததும் குறிப்பிடத்தக்கது.