நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தாழ்வான நிலையில் இருந்த மின் கம்பி மீது அரசு பேருந்து உரசியதில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளன.
இந்த நிலையில், கூட்டாட கிராமத்திலிருந்து கோத்தகிரி நோக்கி அரசு பேருந்தை ஓட்டுநர் பிரதீப் இயக்கி சென்றுள்ளார். அப்போது மழை காரணமாக சாலையில் தாழ்வாக சென்ற மின் கம்பி பேருந்து மீது உரசியது.
இதில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையறிந்து அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக நடத்துனர் உயிர் தப்பினார். பயணிகள் யாரும் பேருந்தில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.