சென்னை கிண்டியில் அமைந்துள்ள ராஜ்பவனில் நடைபெற்ற தேநீர் விருந்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சுதந்திர தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தேநீர் விருந்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை ஏற்று, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இதேபோல, பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் கரு.நாகராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றனர். மேலும் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், சுதந்திரப் போராட்ட தியாகிகள் கௌரவிக்கப்பட்டனர். மேலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்,ரவியுடன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடியதோடு இருவரும் சுதந்திர தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.