70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் தொடர்பான அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி சிறந்த தமிழ்த் திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-1 தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு சிறந்த படம், ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, ஒலிப்பதிவு என 4 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர். ரகுமானுக்கும், ஒளிப்பதிவுக்காக ரவி வர்மனுக்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த மலையாளத் திரைப்படமாக சவுதி வெள்ளக்காவும், சிறந்த கன்னடத் திரைப்படமாக கேஜிஎஃப்-2 ஆம் பாகமும், சிறந்த தெலுங்கு திரைப்படமாக கார்த்திகேயா-2 ஆம் பாகமும், சிறந்த ஹிந்தி திரைப்படமாக குல்மோஹரும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சிறந்த நடிகையாக தமிழில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனனும், இந்தி படமான குட்ச் எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்த மான்ஸி பரீக்கிக்ற்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த நடன காட்சிகளுக்காக திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதா’ என்ற பாடலுக்காக ஜானி, சதீஷ் கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.