கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பெண் மருத்துவருக்கு நடந்த கொடூரம், மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டார்.
நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்தால் அங்கு படிக்கும் அல்லது பணிபுரியும் பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட பிற பெண் மருத்துவ ஊழியர்களுக்கும் பயங்கரமான அச்சத்தையும் பீதியையும் உண்டாக்கி இருக்கிறது.
இந்த சம்பவத்தைக் கண்டித்தும், பெண் மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டும், சமரசமற்ற விசாரணை நடத்தக்கோரியும் மாணவர்களும், மருத்துவர்களும் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் மருத்துவப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களைக் கடந்து, மேற்கு வங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் கோபம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது
மருத்துவரின் மரணத்திற்கு நீதி கோரி கொல்கத்தா முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த 14ம் தேதி இரவு ஏராளமான பெண்கள் இளைஞர்கள் உள்ளிட்ட மேற்கு வங்கத்தின் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் நேற்று நள்ளிரவில் நடந்த போராட்டத்தில் புகுந்த மர்ம கும்பல், கொல்கத்தா அரசு மருத்துவமனையை சூறையாடியுள்ளனர்.
இதில் மருத்துவமனையின் அவசரப் பிரிவு முற்றிலும் சேதமடைந்துள்ளது. மருத்துவமனை வளாகத்தில் கற்கள் வீசப்பட்டன. மருத்துவமனைக்கு வெளியே ஒரு இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், இரண்டு காவல் துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியதால் காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக 9 பேரை கொல்கத்தா காவல்துறையினர் கைது கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மூன்று இடங்களில் நடந்த மம்தா அரசுக்கு எதிரான போராட்டம், காட்டுத் தீ போல் தலைநகரின் 32 இடங்களில் நடைபெற்றன.
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெண் மருத்துவரின் வன்கொடுமை கொலைக்கு நீதி கேட்டு போராட்டங்கள் பரவி வருகிறது.
மேலும், கொல்கத்தாவில் நடந்த சம்பவத்தை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
டெல்லி, பீகார், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா, தெலங்கானாவில் மருத்துவ சேவைகள் முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளன . நாட்டின் பல மாநிலங்களில் மருத்துவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. சுமார் 3 லட்சம் மருத்துவர்கள் நாடு முழுவதும் பயிற்சி மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு வீதியில் இறங்கி தீவிரமாக போராடி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் இந்திய மருத்துவ மாணவர்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வழக்கில் இதுவரையிலான காவல்துறையின் அணுகுமுறை மற்றும் விசாரணை குறித்த நியாயம் கேட்டு போராட்டம் நடத்தும் மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மம்தா பானர்ஜியின் அரசு, இந்த பாலியல் வன்கொடுமை கொலை சம்பவத்தை அவரச அவசரமாக சாட்சியங்களைக் கலைத்து, உண்மைகளை மூடி மறைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக மருத்துவ மாணவர்கள். மருத்துவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பொது மக்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ சிறப்புக் குற்றப் பிரிவு கடந்த வியாழக்கிழமை ஐந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமை கொலைக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கொடூரமாக கொல்லப்பட்ட பெண்ணின் தந்தை, தங்கள் மகளுக்காக இந்தியா உட்பட உலகம் முழுவதும் நடந்து வரும் நீதி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தோடு , குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் இழப்பீட்டுத் தொகையை நிராகரித்து விட்டதாக கூறிய அவர், தனது மகளின் மரணத்திற்கு இழப்பீடாக தமக்கு கிடைக்க வேண்டியது நீதி மட்டுமே என்றும் தெரிவித்திருக்கிறார்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சமூக வலைத்தளத்தில் பலர் பதிவிட்டு வருகின்றனர். மேலும், நாடு முழுவதும் உள்ள சினிமா நட்சத்திரங்கள் உட்பட பல பிரபலங்கள் தங்களது கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இன்னும் ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை என்பதை நாம் உணர வேண்டும். நிர்பயா பாலியல் வன்கொடுமைக்குப் பின் பத்து ஆண்டிற்கு பிறகு, மற்றொரு மோசமான சம்பவம், ஆனால் எதுவும் மாறவில்லை” என பதிவிட்டுள்ளார்.
பாலியல் வன்முறை ஒரு கலாச்சாரமாக மாறியுள்ளது என பதிவிட்டுள்ள பாடகி சின்மயியின் பதிவை நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார்.
நாம் எந்த உலகத்தில் வாழ்கிறோம் என தெரியவில்லை என பிரபல நடிகை மிருனால் தாகூர், பதிவிட்டிருக்கும் நிலையில், பிரபல நடிகர் ராம் சரண் மனைவி உபாஸனா கொனிடேலா, நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் ஆதரவால்தான் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார் மம்தா பானர்ஜி. தொடர்ந்து 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் மம்தாவின் 11 பெண் வேட்பாளர்களை வெற்றி பெறவைத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்தது மேற்கு வங்க பெண் வாக்காளர்கள் என்பது தான் உண்மை.
DHI DHI -தி-தி- என்று தன்னை அழைப்பதை பெருமையாக கருதும் மம்தா பானர்ஜியின் ஆட்சியில், மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களே பெருமளவில் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையில், மேற்கு வங்கத்தில் 2022ம் ஆண்டில் மட்டும் 1,111 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே ஆண்டில், மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 34,738 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன் படி, மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 71.8 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியை விட மிக அதிகமானதாகும்.
`தாய், தாய்நாடு, மக்கள் என்ற சொற்றொடருக்கு பெயர்போன மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சிக்கு வந்தது முதல் வெடிகுண்டு, துப்பாக்கிக் குண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்ற மோசமான பெயரைப் பெற்று வருகிறது.
2026ம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இப்போதே மேற்கு வங்க பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மம்தாவின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுத தொடங்கி விட்டதாக இப்போதே சொல்லத் தொடங்கி விட்டார்கள் அரசியல் பார்வையாளர்கள்.