உலகெங்கும் பல்வேறு நாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் பொருளாதாரம், கலாச்சாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் அரசியலில், மிகப் பெரிய பங்காற்றி வருகின்றனர். அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் செய்து வரும் சாதனைகளைப் பற்றி பார்க்கலாம்.
முதன் முதலாக யூதர்கள் ஜெருசலேத்திலிருந்து விரட்டப்பட்ட நிகழ்வே உலகின் முதல் புலம் பெயர்தல் நிகழ்வு என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இன்று உலக மயமாக்கலுக்கு பிறகு புலம்பெயர்தல் சர்வ சாதாரணமாகி விட்டது. அதனால் அனைத்து நாடுகளின் பொருளாதாரம், கல்வி மற்றும் வெளிநாட்டு கொள்கையில் பெரிய மாற்றங்களும் வந்துள்ளன.
புலம் பெயர்ந்தோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 ஆம் தேதியை உலக புலம் பெயர்ந்தோர் தினமாக கொண்டாட 2000 ஆம் ஆண்டில் ஐ.நா.சபை முடிவு செய்தது.
இந்தியர்கள் புலம் பெயர்வதை ‘இந்தியன் டயஸ்போரா’ என அழைக்கப் படுகிறார்கள். ஏறக்குறைய 110க்கும் மேற்பட்ட நாடுகளில் பல கோடி இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகளவில் அதிகம் புலம் பெயர்ந்தோர் இந்தியர்களே என்று தெரிய வருகிறது.
அமெரிக்காவில் சுமார் இரண்டரை கோடி புலம்பெயர்ந்த இந்தியர்கள் உள்ளனர். மேலும் சுமார் மூன்றேகால் கோடி இந்திய வம்சாவளியினர் வாழ்கின்றனர். அதே சமயம் இங்கிலாந்தில் 8 லட்சத்து 35,000 இந்தியர்களும் , கனடாவில் 7 லட்சத்து 20,000 இந்தியர்களும் , ஆஸ்திரேலியாவில் 5 லட்சத்து 79,000 இந்தியர்களும் வாழ்ந்து வருகின்றனர்.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தாங்கள் தங்கியிருக்கும் நாடுகளின் பொருளாதார, விஞ்ஞான மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
கூகிள், மைக்ரோசாப்ட் போன்ற 500 FORTUNE நிறுவனங்களில் சுமார் 25 இந்தியர்கள் தலைமை பொறுப்பில் பணியாற்றுகிறார்கள்.
கூகுளில் சுந்தர் பிச்சை, பாலோ ஆல்டோ நெட்வொர்க்கில் நிகேஷ் அரோரா, மைக்ரோசாப்ட்டில் சத்யா நாதெல்லா மற்றும் அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாராயண் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தியர்கள் தலைமை தாங்கும் இந்த நிறுவனங்களே அமெரிக்கப் பொருளாதாரத்தில் சுமார் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டி தருகின்றன.
அமெரிக்காவில் உள்ள 650 யூனிகார்ன் நிறுவனங்களில், 72 நிறுவனங்களை இந்திய-அமெரிக்கர்கள் இணை நிறுவனரான இருந்து நிறுவியுள்ளனர். இந்த நிறுவனங்களின் நிகர மதிப்பு 195 பில்லியன் அமெரிக்க டாலராகும். சுமார் 55,000க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் பணிபுரிகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் 60 சதவீத ஹோட்டல்கள் இந்திய-அமெரிக்கர்கள் நடத்தி வருகின்றனர். மேலும் 40 லட்சம் பேர் வேலை செய்யும் இந்த ஹோட்டல்களின் மூலம் சுமார் 700 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டப் படுகின்றன.
அமெரிக்காவில் உள்ள சிறு, குறு அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளில் 35 முதல் 40 சதவீத கடைகளை இந்திய-அமெரிக்கர்களே நடத்துகின்றனர். இந்த கடைகள் மூலம் அதிக பட்சமாக 500 பில்லியன் அமெரிக்க டாலர் வரை வருவாய் ஈட்டப் படுகிறது.
அமெரிக்காவில் அதிக வருமானம் ஈட்டும் புலம்பெயர்ந்த குழுவாக இந்தியர்களே உள்ளனர் உள்ளனர். அமெரிக்காவில் ஒரு அமெரிக்க குடும்பத்தின் சராசரி வருமானம் வெறும் 75,000 அமெரிக்க டாலர் மட்டுமே. அமெரிக்காவில் குடியேறிய சீனர்களின் சராசரி குடும்ப வருமானம் 95,000 அமெரிக்க டாலர் மட்டுமே. ஆனால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் சராசரி குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1லட்சத்து 50,000 அமெரிக்க டாலராகும் .
அமெரிக்காவின் மொத்த வருமான வரியில் சுமார் 5 முதல் 6 சதவிகிதம் வரை இந்திய-அமெரிக்கர்கள் செலுத்துகின்றனர். இது அதிக பட்சமாக 300 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
அமெரிக்காவில் பெறப்படும் அனைத்து காப்புரிமைகளிலும் சுமார் 10 சதவீதத்தை இந்திய-அமெரிக்கர்கள் பெறுகின்றனர். மேலும், அனைத்து தேசிய சுகாதார நிறுவனங்களின் மானியங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு 11 சதவீதம் கிடைக்கப் பெறுகிறது.
அமெரிக்காவில் வெளியாகும் அறிவியல் வெளியீடுகளில் கிட்டத்தட்ட 13 சதவீதம் இந்திய அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டவையாகும். அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சுமார் 2,000 இந்திய வம்சாவளி ஆசிரியர்கள் உள்ளனர்.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் சுமார் 80 சதவீதம் பேர் பள்ளிப் படிப்பு வயதிற்கு மேல் குறைந்த பட்சம் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட 49 சதவீத இந்திய அமெரிக்கர்கள் தொழில்துறை பட்டதாரிகளாக உள்ளனர். அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இந்தியர்களே உள்ளனர். அமெரிக்காவில் உயர் திறமையான தொழிலாளர்களுக்கு பெரும்பாலான முதலாளிகள் வழங்கும் H1-B விசாக்கள் இந்தியர்களுக்கே வழங்கப்படுகின்றன.
அமெரிக்காவில் உள்ள 10 மருத்துவர்களில் ஒருவர் இப்போது இந்திய-அமெரிக்கர் என்கிறது ஒரு ஆய்வறிக்கை. இன்னொரு ஆய்வறிக்கை அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மொழியாக தெலுங்கு இருப்பதாக கூறுகிறது.
அமெரிக்க அரசியலிலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பெரும் அலைகளை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவின் துணை அதிபரும் தற்போதைய அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸை சொல்லலாம். மற்றொரு புறம், ஐந்து இந்திய-அமெரிக்கர்கள், ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால், ஸ்ரீ தானேதர், அமி பெரா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாக ‘சமோசா காகஸ்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.
அமெரிக்க மக்களில் 84 சதவீதம் பேர் சீனாவைப் பற்றி எதிர்மறையான பார்வையைக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான சிந்தனை கொண்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கை வெறும் 27 சதவீதம் தான்.
அமெரிக்காவில் மட்டுமில்லாமல், இங்கிலாந்திலும் இந்தியர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்தியர்களே அதிக வீட்டு உரிமையைக் கொண்டுள்ளனர். இங்கிலாந்தில் வாழும் இந்தியர்களில் 71 சதவீதம் பேர் சொந்த வீடுகள் வைத்திருக்கிறார்கள் என்று அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதற்கிடையே, இங்கிலாந்தில் உள்ள மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட 34 சதவீத தொழில் வல்லுநர்களில் பெரும்பாலும் இந்தியர்களே. முன்னாள் பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக் உட்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 19 பேர் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
இங்கிலாந்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் ஐரோப்பாவிலும் குறிப்பாக ஜெர்மனியில் அதிக வருமானம் ஈட்டுபவர்களாக உள்ளனர்.
எங்கே சென்றாலும் இந்தியர்கள் அங்கே சொத்தை வாங்குவதன் மூலம் உள்ளூர் பொருளாதார முறைகளையும் மாற்றுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
உண்மையில், உலகமெங்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் புலம் பெயர்ந்த இந்தியர்கள் பெருமளவில் அதிகரித்து வருவது, உலகில் இந்தியாவின் ஆதிக்க எல்லை வளர்ந்து வருவதையே காட்டுகிறது.
உலகின் புலம்பெயர்ந்த சமுதாயங்களில் இரண்டாவது பெரிய சமுதாயமாக விளங்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கும், உலக நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார, இலக்கிய, அரசியல் மற்றும் பொருளாதார பிணைப்பை வலுப்படுத்த பெருமளவில் பங்களித்து வருகின்றனர் என்பதே உண்மை.