மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறவில்லை என்றும், 2032-ஆம் ஆண்டு வரை விளையாடுவேன் என்றும் வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் இறுதி போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தங்கத்தை தவறவிட்டார். பின்னர், வெள்ளி பதக்கம் கோரி சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடியானது.
இதனிடையே, மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வுபெறுவதாக வினேஷ் போகத் கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அதை மறுத்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ஓர் இலக்கை குறிவைத்து பாடுபட்டபோது அதை அடைய முடியவில்லை என்ற உணர்வு மேலோங்குகிறது என்றாலும், அதே நிலை தொடர்ந்து நீடிக்காது என வினேஷ் போகத் கூறியுள்ளார்.
போராட்ட குணமும், மல்யுத்தமும் தனக்குள் அப்படியே நீடிப்பதால், 2032-ஆம் ஆண்டுவரை களத்தில் இருப்பேன் என வினேஷ் போகத் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவர் ஓய்வுபெறும் முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது.