ஒலிம்பிக் பதக்கம் விவகாரத்தில் முடிவு கிடைக்கும் வரை தனது போராட்டம் ஓயாது என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
பாரீஸில் இருந்து தாயகம் திரும்பிய வினேஷ் போகத்திற்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய வினேஷ் போகத்திற்கு, சக மல்யுத்த வீரர்கள், உறவினர்கள் ஆறுதல் கூறினர். இதனைத் தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் அவர் சொந்த ஊருக்கு சென்றார்.
ஹரியானா மாநிலம், பலாலி கிராமத்தில் அரசு சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ஒலிம்பிக் பதக்கம் ஒரு ஆழமான காயமாக மாறிவிட்டதாகவும், அது குணமடைய நீண்டநாள் ஆகும் என தெரிவித்தார்.
மல்யுத்தத்தில் இருந்து விலகியிருந்தாலும், அதனை தொடர்வது குறித்து தற்போது எதுவும் கூறமுடியாது என குறிப்பிட்டார். ஒலிம்பிக் பதக்க விவகாரத்தில் ஒருகட்ட போராட்டத்தை கடந்து விட்டாலும், முடிவு கிடைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
















