சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில் தங்கையை கொன்றதாக கூறி மாமியார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகரை சேர்ந்த சுபாஷ் என்பவரும், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மஞ்சு என்பவரும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத மஞ்சுவின் பெற்றோர் சுபாஷுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த மார்ச் 6ஆம் தேதி தனது தங்கை ஹரிணியுடன் இருசக்கர வாகனத்தில் சுபாஷ் சென்றபோது மஞ்சுவின் பெற்றோர் வேன் மோதி விபத்து ஏற்படுத்தியதாக தெரிகிறது.
இதில் படுகாயமடைந்த ஹரிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மஞ்சுவின் பெற்றோர் உள்ளிட்ட 6 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்ற மாமியார் சித்ரா மீது மருமகன் சுபாஷ் பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமடைந்த சித்ரா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தப்பியோடி சுபாஷை போலீசார் தேடி வருகின்றனர்.