ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் உரிமைகளையும் நிலைநாட்டுவதே குடியுரிமை திருத்தச் சட்டத்தின் நோக்கம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவில் குடியேறிய மக்களுக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குடியுரிமை சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று குடியுரிமை சான்றிதழை வழங்கினார். அப்போது பேசிய அவர், சிஏஏ என்பது வெறுமனே குடியுரிமை வழங்குவது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான மக்களுக்கு நீதியையும் உரிமையையும் நிலைநாட்டும் அம்சம் என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் ஒருசாராரை திருப்திப்படுத்துவதற்காக கடந்த 1947 முதல் 2014-ஆம் ஆண்டுவரை இந்தியாவில் புகலிடம் தேடிய மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறிய அமித் ஷா, இந்து, பெளத்தம், சீக்கியம் அல்லது சமண சமயத்தைச் சார்ந்தவர்கள் அண்டை நாடுகளில் மத ரீதியாக ஒடுக்கப்பட்டதாக வேதனை தெரிவித்தார்.