கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து, ‘இரவை பாதுகாப்பானதாக்குவோம்’ என்ற முழக்கத்துடன் மேற்கு வங்கம் முழுவதும் இரவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலைக்கு நீதி கேட்டு பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திர தினத்திற்கு முன்னதாக, கடந்த 14-ம் தேதியன்று இரவு, ‘இரவை பாதுகாப்பானதாக்குவோம்’ என்ற முழக்கத்துடன் சிலிகுரி, துர்காபூர் உள்ளிட்ட இடங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு ஜாதவ்பூர், கரியா, கன்னா, லேக் டவுன் உள்ளிட்ட பகுதிகளில், வயது வித்தியாசமின்றி ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செல்ஃபோனின் டார்ச் லைட்டை ஒளிரச் செய்தும், கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் போராட்டம் நடைபெற்றது.