சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றி நடிகர் விஜய் ஒத்திகை பார்த்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் வரும் 22-ம் தேதி அக்கட்சியின் கொடி அறிமுக விழா நடைபெறுகிறது. அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுமார் 30 அடி உயர கொடிக் கம்பத்தில் தமிழக வெற்றிக் கழக கொடியை விஜய் ஏற்றிவைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அங்கு நடைபெறும் பணிகளை காண நடிகர் விஜய் தானே தனது பி.எம்.டபிள்யூ சொகுசு காரை ஓட்டிக் கொண்டு அலுவலகம் வந்தார். அப்போது அங்கு நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் மஞ்சள் நிறத்திலும், நடுவில் விஜய் படத்துடனும் உள்ள கொடியை கம்பத்தில் ஏற்றி இருமுறை ஒத்திகை பார்த்தார்.
இந்த கொடி அறிமுகம் நிகழ்ச்சியில் தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து 250 முதல் 300 முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.