இந்தியாவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் மொத்த உற்பத்தியில் 14 சதவீதம் பங்கை தன்னிடம் வைத்திருக்கும் ஆப்பிள் நிறுவனம், கடந்த 50 ஆண்டுகளில் நாட்டில் வேகமாக வளர்ந்துவருகிறது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில், நாட்டில் நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆப்பிளின் உலகளாவிய உற்பத்தியில் இந்தியாவின் பங்கு கணிசமாக வளர்ந்திருக்கிறது.
இந்தியாவில் தங்கள் விற்பனையை அதிகரிக்க தீவிரமாக செயல்பட்டு வரும்,ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக், கடந்த ஆண்டு, நாட்டின் முதல் இரண்டு ஆப்பிள் விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்தார்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக உறவில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும் சூழலில், சீனாவை ஒரு அபாயகரமான சந்தையாகவே அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் பார்க்கின்றன. இந்நிலையில், ஆப்பிள் இந்திய சந்தையில் கால் வைத்தது.
சீனாவில் உற்பத்தியாகும் மலிவான ஆண்ட்ராய்டு போன்களே இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. குறிப்பாக நுகர்வோர் பயன்பாட்டில் உள்ள சுமார் 70 கோடி ஸ்மார்ட்போன்களில் வெறும் 3.5 சதவீதம் மட்டுமே ஆப்பிளின் ஐபோன்களாக உள்ளன.
ஆனால் ஆப்பிள் போன்களின் மொத்த உற்பத்தியில் 14 சதவீத ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தியாகின்றன. இதுகடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும் .
மேலும், ஆப்பிளின் மேக்புக்ஸ், ஐமாக்ஸ், ஐபாட்கள், வாட்ச்கள் மற்றும் ஏர்போட்களின் இந்திய விற்பனையும் கணிசமாக கூடியுள்ளது.
கடந்த நிதியாண்டில் சுமார் 1.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதியான நிலையில் இந்த ஆண்டு 2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இந்தியாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. ஆப்பிளின் உலகளாவிய ஏற்றுமதிக்கான முக்கிய மையமாக இந்தியா மாறிவருவதையே இது காட்டுவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க 2020 ஆண்டு பிரதமர் மோடியால் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆப்பிள் நிறுவனம் 2021ம் ஆண்டு இந்தியாவில் தன் உற்பத்தியைத் தொடங்கியது. இப்போது, ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகிய நிறுவனங்கள் மூலம் ஆப்பிள் ஐபோன் உற்பத்தியைப் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன்களில் ஏறத்தாழ 75 சதவீத ஐபோன்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மீதமுள்ள 25 சதவீத ஐபோன்கள் உள்நாட்டில் விற்பனையாகின்றன.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம்,ஐபோன் உற்பத்தியைத் தொடங்கியதிலிருந்து 150,000 நேரடி வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது. இதில் ஃபாக்ஸ்கானின் தொழிற்சாலையில் மட்டும் 41,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
ஆண்ட்ராய்டு போன்களின் ஆதிக்கம் நிறைந்த இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிளின் பங்கு, 2 சதவீதத்தில் இருந்து இப்போது 6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய வருவாய் 68,000 கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. இந்த வருவாய் வளர்ச்சியில் iPhoneகள் மட்டுமின்றி, MacBooks, iPads, Watches, AirPods மற்றும் பிற ஆப்பிள் தயாரிப்புகளும் அடங்கும் என்பது குறிப்பிடத் தக்கது.