கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில், முதல்வர் மம்தா பானர்ஜியின் இரட்டை அணுகுமுறை பற்றி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம், பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளையும், கேள்விகளையும் எழுப்பி உள்ளது.
மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தின் மூலம் அரசுக்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப் பட்ட சம்பவத்தில், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது.
மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள்,பிற மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவ மனைகளைப் பாதுகாப்பதற்கான அவசரச் சட்டம் இயற்றுவதற்கு பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று எய்ம்ஸின் குடியுரிமை மருத்துவர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையில், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, இரவு நேரத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இரவில் துணைவருபவர்கள் என்று பொருள்படும் ‘ராத்திரேர் ஷாதி’ [Rattirer Sathi] என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோர், இந்த வழக்கில் முதல்வர் மம்தா பானர்ஜி நடந்து கொண்ட விதம் பற்றி தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
தங்கள் மகளுக்கு நீதி கேட்டு பேரணி நடத்தும் முதல்வர் அதே நேரத்தில், பொதுமக்களின் கோபத்தை அடக்க காவல்துறை அடக்குமுறைகளை ஏவி விடுகிறார் என்றும், மக்களின் நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் முதல்வர் யாரை ஏமாற்ற நாடகம் ஆடுகிறார் ? என்றும் பாதிக்கப் பட்ட பெண்ணின் தந்தை கேள்வி எழுப்பியிருக்கிறார்.
முதலில் தங்கள் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என்று தொலைபேசியில் சொன்னதாகவும், பிறகு தற்கொலை செய்து கொண்டதாக கூறியதாகவும், பிறகு , உடல் கூறாய்வு செய்து அவசரம் அவசரமாக தங்கள் மகளின் உடலைத் தகனம் செய்ததாகவும் கூறிய பாதிக்கப் பட்ட பெண்ணின் தந்தை, முதல்வர் வழக்கை விரைவில் மூடிமறைக்க மட்டுமே முயற்சி செய்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும், மத்திய புலனாய்வு விசாரணைக்கு வழக்கு மாற்றப்படும் வரை, மம்தாவின் காவல்துறை இந்த வழக்கை விசாரித்த விதம் குறித்தும் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.
தனது மகள் பயிற்சி மருத்துவராகப் பணிபுரியும் மருத்துவமனையின் மார்பு மருத்துவப் பிரிவும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டிய அவர், இந்த கொடுரச் சம்பவத்துக்கு முழுத் துறையும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மம்தா பானர்ஜி பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் என்றும், இது முதல்வரின் இரட்டைத் தன்மையைக் காட்டுவதாகவும் பெண்ணின் தந்தை கூறியிருக்கிறார்.
இதற்கிடையே, 2012ம் ஆண்டு டெல்லி கூட்டு பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட நிர்பயாவின் தாயார், மேற்கு வங்கத்தில் நிலைமையைக் கையாள முதல்வர் மம்தா பானர்ஜி தவறிவிட்டதாகவும்,0 சட்டம் ஒழுங்கை குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை காப்பாற்றத் தவறியதற்காக பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐயின் விசாரணை அதிகாரிகள், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் தொலைபேசியில் பதிவாகி இருந்த அழைப்புகள் மற்றும் உரையாடல்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இரண்டு கொல்கத்தா காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட 20 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வரும் சிபிஐ விசாரணை அதிகாரிகள், தங்கள் முன் நேரில் ஆஜரான மருத்துவ மனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் அவரது தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரித்தனர் என்று தெரிய வருகிறது.
1993ம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி, நாடியா மாவட்டத்தில் காது கேளாத வாய் பேச முடியாத ஒரு சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமைக்கு நீதி கேட்டு அப்போதைய முதல்வர் ஜோதி பாசுவை எதிர்த்து போராடினார் மம்தா பானர்ஜி.
அப்போது அரசியல் தொடர்புகள் காரணமாகவே உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டிய மம்தா பானர்ஜி, தற்போது முதல்வராக இருக்கும் நிலையில், ஜோதி பாசு செய்த அதே தவறை செய்கிறார் என்று மேற்குவங்க மக்கள் விமர்சனம் செய்கின்றனர்.