குரங்கம்மை பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்று பரவல் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
அதன்படி வெளிநாட்டில் இருந்து வருபவர்களை, பரிசோதனை செய்தபிறகே அனுமதிக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உடலில் சிறு கொப்பளங்கள், தலைவலி, தசைபிடிப்பு, உடல் சோர்வு, தொண்டை புண், இருமல் அறிகுறிகள் தென்பட்டால் உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
குரங்கமை பாதிப்பு தொடர்பான தகவல்களை குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை குரங்கமை பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இந்தியாவில் குரங்கம்மை நோயினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் தாக்கம் பெரிய அளவிற்கு இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளது.