சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்துப் பேருந்து நிறுத்தங்களிலும் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவின் பேரில் சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ஒரு நாள் முழுவதும் மாஸ் கிளீனிங் என்ற பெயரில் தீவிர தூய்மைப் பணிகள் நடைபெற்றன.
கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கிய தூய்மைப் பணியில், சாலையோரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டுவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, நீண்ட நாட்களாக தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பேருந்து நிறுத்தத்திலும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் ஒட்டப்பட்டுள்ள தேவையற்ற விளம்பர ஸ்டிக்கர்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டனர். சென்னை முழுவதும் நடைபெற்ற மாஸ் கிளீனிங் பணிகளை மாநகராட்சி உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.