4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மீன்பிடி தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 265க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. விசைப்படகுகளுக்கு தேவையான ஐஸ் பார் கட்டணம் 10 ரூபாய் உயர்த்தப்பட்டதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், விசைப்படகுகளுக்கு ஐஸ் பார்கள் வழங்காததால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி வைத்தனர். ஐஸ் பார் விலை உயர்வு தொடர்பான பிரச்னைகள் பேசி தீர்க்கப்பட்ட நிலையில், மீன் பிடி தொழிலாளர் சங்கத்தினர் நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பொது வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
இதனால், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி உள்ளது. தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசும், மீன்வளத்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசைப்படகு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.