எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையைக் கண்டித்து, தேசிய தலித், ஆதிவாசிகள் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது.
எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை நிர்ணயிக்கும் கிரீமிலேயர் தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தேசிய தலித், ஆதிவாசிகள் கூட்டமைப்பினர், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
இதையொட்டி, ராஜஸ்தான், பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பாலான கடைகளும், கல்வி நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.
தேசிய தலித், ஆதிவாசிகள் கூட்டமைப்பினர் நடத்திய நாடு தழுவிய போராட்டத்துக்கு சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதனிடையே, பீகார் தலைநகர் பாட்னாவில் உச்சநீதிமன்ற பரிசீலனைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவியது.