இந்தியாவின் வளர்ச்சி உலகில் நிலைத்தன்மை, அமைதியை அதிகரிக்கும்: குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், உலகளாவிய தென் பகுதியின் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவின் உள்ளடக்கிய, அணுகுமுறையை முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். “இந்தியாவின் உதயம், துடிப்பான ஜனநாயகம், மனிதகுலத்தில் ஆறில் ஒரு பங்கு மக்கள் வசிக்கும் இடம், உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கு முன்னறிவிப்பு” என்று அவர் கூறினார்.
“ஒரே எதிர்காலத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற 19-வது இந்திய தொழில் கூட்டமைப்பு இந்தியா-ஆப்பிரிக்கா வர்த்தக மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், அனைவரின் நல்வாழ்வுக்கும் பொதுவான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
“ஒரே எதிர்காலத்தை உருவாக்குவது மனிதகுலத்தின் நிலைத்தன்மைக்கு மிகச்சிறந்ததாகும். மேலும் இந்த சவாலை இனியும் தாமதப்படுத்த முடியாது” என்று அவர் கூறினார்.
பருவநிலை மாற்றம் மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், சவாலை எதிர்த்துப் போராடுவதில் அனைத்து நாடுகளும் கூட்டாக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான ஆழமான வேரூன்றிய உறவுகள் குறித்து கவனத்தை ஈர்த்த தன்கர், “பகிரப்பட்ட வரலாறுகள், பொதுவான போராட்டங்கள் மற்றும் முற்போக்கான எதிர்காலத்திற்கான பரஸ்பர அபிலாஷைகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது” என்று ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை விரிவாக எடுத்துரைத்தார்.
சிறுத்தைகளை வழங்கியதன் மூலம் நாட்டின் பல்லுயிர் பெருக்கத்தை மீண்டும் உருவாக்க உதவியதற்காக ஆப்பிரிக்காவுக்கு இந்தியாவின் நன்றியைத் தெரிவித்த குடியரசு துணைத்தலைவர்,
“இந்த வளர்ச்சி தேசத்தை உற்சாகப்படுத்தியதுடன், இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே ஒரு உணர்வுபூர்வமான இணைப்பைக் கொண்டு வந்தது” என்று குறிப்பிட்டார். சர்வதேச பெரிய பூனை கூட்டணியில் சேருமாறு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
சிஐஐ தலைவரும், ஐடிசி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான திரு. சஞ்சீவ் பூரி, சிஐஐ ஆப்பிரிக்கா கமிட்டியின் தலைவரும், டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் தலைவருமான திரு நோயல் டாடா, சிஐஐ தலைமை இயக்குநர் திரு. சந்திரஜித் பானர்ஜி மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.