தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ்நாடு வளர்ச்சிக்காகவும் உழைப்போம் என நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள நிலையில், சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடி அறிமுகம் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பனையூர் தலைமை அலுவலகம் வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் விழா மேடைக்கு சென்ற விஜய், தமிழக வெற்றிக் கழக உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். நெஞ்சில் கை வைத்து உறுதிமொழியை ஏற்கும்படி அவர் நிர்வாகிகளிடம அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய், தலைமை அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிகம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இரு வண்ணங்களில், 2 போர் யானைகள், வாகை மலருடன் இருக்கும் வகையில் கட்சி கொடி வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து விழா மேடைக்கு மீண்டும் சென்ற நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகக் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடை வெளியிட்டார்.
பின்னர் விழாவில் உரையாற்றிய நடிகர் விஜய், கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியது பெருமையாக உள்ளது என்றும், கட்சிக் கொடிக்கான குறிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் கூறினார். கொடியில் இடம் பெற்றுள்ள படங்களின் விளக்கம் முதல் மாநில மாநாட்டில் தெரிவிக்கப்படும் எனக்கூறிய அவர், முதல் மாநில மாநாடு எப்போது நடைபெறும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இனி தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ்நாடு வளர்ச்சிக்காகவும் உழைப்போம் என குறிப்பிட்டார். இது கட்சிக்கொடி அல்ல, வருங்கால தலைமுறையினருக்கான வெற்றிக்கொடி எனக்குறிப்பிட்ட நடிகர் விஜய், தொண்டர்கள் அவரவர் இல்லத்தில் முறையாக அனுமதிப் பெற்று கட்சிக் கொடியை ஏற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.