வங்கதேச இனப்படுகொலைக்கு எதிராக ஒரு மணிநேரம் போராட்டம் நடத்த இந்து முன்னணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்கள் இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரியதாகவும் ஆனால் அனுமதி மறுத்து விட்டதாகக் கூறி சென்னை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சிவா விஜயன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இம்மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.உதயகுமார், வங்கதேசத்தில் நிலைமை சீரடைந்துவிட்டதால் போராட்டம் நடத்த தேவையில்லை. அதனால், மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்றார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், இந்துக்கள் தாக்கப்படுவது, இந்து கோயில்கள் இடிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்றார்.
இதையடுத்து, ஆகஸ்ட் 27ம் தேதி மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் போரட்டம் நடத்த வேண்டும்.என நீதிபதி உத்தரவிட்டார்.