ரயில் மூலமாகவோ, பேருந்துகள் மூலமாகவோ சென்னையை நோக்கி வருவோர் கண்களில் முதலில் தென்படும் பிரம்மாண்ட கட்டடம் ரிப்பன் மாளிகையாகத் தான் இருக்க முடியும். அப்படி சென்னையின் தவிர்க்க முடியாத அடையாளமாக திகழும் ரிப்பன் மாளிகை குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து 10 மைல்களை உள்ளடக்கி 40 ஆயிரம் மக்களுடன் சிறிய நகரமாக தோன்றிய மெட்ராஸின் பரப்பளவு தற்போது பரந்து விரிந்து ஒரு கோடிக்கும் அதிகமான பெருநகர சென்னை மாநகராட்சியாக வளர்ந்துள்ளது. புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கிவந்த மாநகராட்சி நிர்வாக கட்டடம், தற்போது சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பிரம்மாண்டமான ரிப்பன் மாளிகையாக காட்சியளிக்கிறது.
பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராயராக இருந்த மிண்டோ பிரபு, 1909ம் ஆண்டு புதிய மாநகராட்சி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். அக்கால கட்டத்தில் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த கட்டடத்தின் மொத்த மதிப்பீடு 7.5 லட்ச ரூபாய் ஆகும்.
இந்திய வம்சாவளி மக்களுக்கு ஆதரவாக பல முக்கியச் சட்டங்களை நிறைவேற்றி உள்ளூர் தன்னாட்சி நிர்வாகத்தின் தந்தை என போற்றப்பட்ட பிரிட்டிஷ் இந்தியாவின் கவனர் ஜெனரலாக இருந்த ரிப்பன் பிரபுவின் நினைவாக இந்த மாளிகைக்கு ரிப்பன் மாளிகை என பெயர் சூட்டப்பட்டது.
செவ்வக வடிவில் அமைந்திருக்கும் ரிப்பன் மாளிகை 279 அடி நீளமும், 105 அடி அகலமும், 141 அடி நீளமும் கொண்டது. இந்த மாளிகையின் சிறப்பம்சமாக திகழும் மணிக்கூண்டு கடிகாரம், பிரிட்டனின் வெஸ்ட்மினிஷ்டர் அரண்மணையில் இயங்கும் இயங்கும் கடிகாரத்தைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
1680-களில் சென்னை மாநகராட்சித் தலைவர் பதவியென்பது நீதிபதியின் பதவிக்கு இணையானதாக கருதப்பட்டது. அதன் காரணமாகவே நீதிபதி அணியும் அங்கியைப் போன்ற ஆடையை மாநகராட்சித் தலைவரும் அணிவது நடைமுறையாக இருந்தது. மாநகராட்சி பல்வேறு பரிமாணங்களை சந்தித்த நிலையில், மாமன்ற கூட்டத்தின் போது மேயர் கருப்பு நிற அங்கி அணிவது இன்றளவும் வழக்கத்தில் உள்ளது.
தங்களின் குறைகளை தீர்க்க சென்னை மாநகராட்சியை நோக்கி வரும் பொதுமக்களுக்கு, மேயர் இருக்கிறாரா ? இல்லையா ? என்பதை தெரிவிக்கும் வகையில் ரிப்பன் மாளிகையின் மேல் கொடியேற்றம் மற்றும் இறக்க நிகழ்வு நாள்தோறும் நடைபெற்று வருகிறது. அதாவது கொடி பறந்தால் மேயர் இருக்கிறார் என்பதையும், கொடி பறக்காவிட்டால் மேயர் இல்லை என்பதை குறிக்கும் வகையில் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சென்னையில் எத்தனையோ கட்டடங்கள் கட்டப்பட்டாலும், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் புகழ்மிக்க இந்தோ – சராசனிக் பாணியில் கட்டப்பட்ட ரிப்பன் மாளிகை இன்றளவும் சென்னையின் அடையாளமாக தனித்து நிற்கிறது.