கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதாகியுள்ள சிவராமன் மீது மேலும் ஒரு பாலியல் புகார் வந்துள்ளதாக சிறப்பு புலனாய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு மற்றும் பல்நோக்கு குழுவை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு புலனாய்வு குழுவினர், பயிற்சி வகுப்புகளின்போது மாணவர்களுடன் ஆசிரியர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.