கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது தந்தையும் விபத்தில் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், என்சிசி திட்டத்திற்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதற்கான முகாம் பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது.
அந்த முகாமில், போலியான பயிற்சியாளர்கள் கலந்துகொண்டு, அங்கு பயிலும் பள்ளி மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பயிற்சியாளரும் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன் உள்பட 11 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சிவராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், மதுபோதையில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து தலையில் படுகாயமடைந்த சிவராமனின் தந்தை அசோக்குமாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.