புதுச்சேரியில் கடையின் உரிமையாளரை நூதன முறையில் ஏமாற்றி மர்மநபர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி நகர பகுதியான சின்ன சுப்ராயபிள்ளை வீதியில் அமீன்கான் என்பவர் பைகள் விற்பனை கடை நடத்தி வரும் நிலையில், அவரது கடைக்கு வந்த நபர் சிலர் பைகளை வாங்குவது போல் விலை பேசியுள்ளார்.
பின்னர், பணத்தை வீட்டில் மறந்து வைத்துவிட்டதாகவும், வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்துவர இருசக்கர வாகனத்தை தருமாறும் கேட்டுள்ளார்.
இதனை நம்பிய அமீன்கான் தனது இருசக்கர வாகனத்தை கொடுத்து, கடை ஊழியரை உடன் அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், நகர் பகுதியில் உள்ள பூட்டிய வீட்டின் அருகே சென்ற அந்த நபர், உறவினர் வீட்டிற்கு சென்று சாவி வாங்கி வருவதாக கூறி ஊழியரை இறக்கிவிட்டு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அந்த நபர் வராததால், ஊழியர் அளித்த தகவலின்படி போலீசில் அமீன்கான் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மர்மநபர் வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.