மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இலக்கை எட்டியுள்ளது.
மாநிலங்களவையில் காலியாக இருந்த 9 மாநிலங்களைச் சேர்ந்த 12 உறுப்பினர்களுக்கான தேர்தல் செப்டம்பர் 3-ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், பாஜக உறுப்பினர்கள் 9 பேர், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 2 பேரும், காங்கிரஸில் இருந்து ஒருவர் என 12 பேர் போட்டியின்றி தேர்வாகினர்.
இதில் மத்திய இணையமைச்சர்கள் ஜார்ஜ் குரியன், ரவ்ணீத் சிங் பிட்டு உள்ளிட்டோரும் அடங்குவர். இதன் மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 96 ஆகவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 112 ஆகவும் அதிகரித்துள்ளது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 6 நியமன எம்.பி.க்கள் மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினரின் ஆதரவும் உள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 245 எனும் நிலையில், தற்போது ஜம்மு – காஷ்மீரில் 4 இடங்களும், நியமன உறுப்பினர்களின் 4 இடங்களும் மட்டுமே காலியாக உள்ளன.
இதனால் உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கை 237 ஆக உள்ளது. இதில் பெரும்பான்மை இலக்கு 119 ஆகும். இந்த இலக்கை தேசிய ஜனநாயக கூட்டணி எட்டியதால், நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் எளிதில் நிறைவேறும் என கருதப்படுகிறது.