நடிகை சமந்தா உள்ளிட்ட பிரபலங்களை வம்புக்கு இழுத்து சர்ச்சைக்குள்ளான ‘தி லிவர் டாக்டர் இப்போது ஜோஹோ நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்புக்குப் பதில் கொடுத்து நெட்டிசன்களால் கேலிக்கு ஆளாகி இருக்கிறார். ஸ்ரீதர் வேம்பு என்ன பதிவிட்டார்? அதற்கு டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்ன சொல்கிறார்? என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
புல் தரையில் வெறுங்காலுடன் நடக்கும்போது நாம் நன்றாக உணர்கிறோம். அது ஏன்? என்பதைப் பற்றி சமீபக் காலமாக நிறைய அறிவியல் ஆய்வுகள் வந்துள்ளன.
அற்புதமான மற்றும் சக்திவாய்ந்த ஆற்றல் பூமியில் நிறைந்திருக்கிறது. வெறுங்காலுடன் நாம் நடக்கும் போது பூமியிலிருந்து எலக்ட்ரான்கள் நம் உடலால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த ஆற்றல் நம் உடல் மற்றும் மனத்தை ஆரோக்கியமாக்குகிறது.
வெறுங்காலுடன் நடப்பதே இப்போது எர்திங் அல்லது கிரவுண்டிங் என்று உலகமெங்கும் பிரபலமாகி வருகிறது.
வெறுங்காலுடன் புல்வெளியில் நடப்பது எப்படி உடல் நலத்தை பாதுகாக்கிறது என்பது sunny river என்ற எக்ஸ் பக்கத்தில், அறிவியல் ரீதியாக விளக்கப் பட்டிருந்தது.
இந்த எக்ஸ் பக்கத்தை இணைத்து,ஜோஹோ நிறுவன நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு, தனது எக்ஸ் தளத்தில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக தனது பண்ணையில் வெறுங்காலுடன் நடந்து வந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
வெறுங்காலுடன் நடப்பது ஒரு எளிமையான மற்றும் செலவில்லாத நடைமுறை எனப் பாராட்டிய ஸ்ரீதர் வேம்பு, அதனால் எந்த தீங்கு ஏற்படாது என்றும், கிராமப்புற மக்கள் பல ஆண்டுகளாக வெறுங்காலுடன் தான் நடந்து வருகிறார்கள் என்றும் கூறியிருந்தார். மேலும்,வெறுங்காலுடன் நடக்க முயற்சி செய்யுமாறு மற்றவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் உடல்நலம் ஆரோக்கியம் தொடர்பாக மாற்று வழிகளைச் சொல்லும் பிரபலங்களைக் குறிவைத்து அவதூறு பரப்பும், சர்ச்சைக்குரிய மருத்துவர் சிரியாக் அப்பி பிலிப்ஸ், உடனடியாக ஸ்ரீதர் வேம்புவை விமர்சித்திருந்தார். மேலும் நம்பத்தகுந்த பலன்கள் இல்லாத வெறுங்காலுடன் நடப்பது, ஒரு “போலி அறிவியல் நடைமுறை” என்று நிராகரித்தோடு, ஸ்ரீதர் வேம்புவின் எக்ஸ் பதிவு அறிவியல் கட்டுரைகளை மாசுபடுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
படிக்காத பூமர் சிந்தனை உடைய ஸ்ரீதர் வேம்பு போன்ற நபர்களைத் தவிர்ப்பது நல்லது என்றும் இதுகுறித்து சாமானிய மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமென்று ‘தி லிவர் டாக்டர்’ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இது ஆணவத்தின் அடையாளம் என்று கூறிய ஸ்ரீதர் வேம்பு , பழங்கால பழக்கவழக்கங்களை அவசர அவசரமாக நிராகரிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
உடல்நலம் பற்றிய போதிய படிப்பிறிவில்லாதவர் என்று தம்மை பற்றி கூறியதற்கு பதிலளித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் பிஎச்டி பட்டம் பெற்ற தமக்கு ‘அறிவியல் படிப்பறிவில்லாத போதிலும் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படிக்கத் தெரியுமென்றும், பெரும்பாலான ஆராய்ச்சிக் கட்டுரைகள் போலியானவை என்பதும் தெரியும் என்றும் காட்டமாக கூறியிருக்கிறார்.
‘தி லிவர் டாக்டர்’ சிரியாக் அப்பி பிலிப்ஸ், இப்படி பதிவிடுவது முதல்முறையல்ல என்று தெரிய வருகிறது. ஏற்கெனவே, குழந்தைகளுக்கான ஹெபடைடிஸ் பி தடுப்பூசி ஏன்? என ஸ்ரீதர் வேம்பு கேள்வி எழுப்பிய போதும் அவருக்கு எதிராக விமர்சனங்களை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் நடிகை சமந்தாவை மருத்துவ அறிவியலில் “படிக்காதவர்” என்று அழைத்ததற்காக பின்னர் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
இதனால், ஆணவமிக்க மருத்துவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும், ஸ்ரீதர் வேம்பு சொல்வது சரிதான் என்றும் சமூக ஊடங்கங்களில் பலரும் ஸ்ரீதர் வேம்புவுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.