இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இந்த ஆண்டு இறுதிக்குள் சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ஐரோப்பாவில் உள்ள நைட்ஜெட் ஸ்லீப்பர் ரயில்களைப் போல வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய இரயில்வே தன்னை நவீனப்படுத்திக் கொண்டிருக்கிறது. சுகமான மற்றும் வேகமான பயண அனுபவத்தை மக்களுக்கு வழங்க தொடர் முயற்சிகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், இரயில் பயணிகளுக்கு இந்திய அரசு கொடுத்த அற்புதமான பரிசு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்றால் மிகையில்லை.
நாட்டின் ஒவ்வொரு மூலையையும் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்ட அதிவேக ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பிரபலமடைந்து வருகிறது. அடுத்த கட்டமாக, வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் தொடங்கி விடும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.
அதற்கான முன்னேற்பாடுகளைக் கிட்டத்தட்ட ஏற்பாடுகளை முழுமையாக முடிந்து விட்டதாகவும் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில் வரும் செப்டம்பர் 20ம் தேதி பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து சேரும் என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையில், இறுதி சோதனை 20 நாட்களில் முடிவடைந்த பிறகு, லக்னோவில் உள்ள இந்தியன் இரயில்வே வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பின் (RDSO) மேற்பார்வையில், அலைவு சோதனைகள் உட்பட முக்கிய சோதனைகள் நடத்தப்படும் என்றும், அதன் பிறகு மக்கள் பயன்பாட்டுக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில் அர்ப்பணிக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய இந்த ஸ்லீப்பர் ரயிலில் 823 பெர்த்கள் உள்ளன. இவற்றில், 3rd ஏசியில் 611இருக்கைகள் கொண்ட 11 பெட்டிகளும், 2nd ஏசியில் 188 இருக்கைகள் கொண்ட 4 பெட்டிகளும் மற்றும் 1st ஏசியில் 24 இருக்கைகள் கொண்ட ஒரு பெட்டியும் உள்ளன.
நேர்த்தியான வெளிப்புறத்தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில், பயணிகளின் வசதிக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளன.
USB சார்ஜிங் வசதி கொண்ட படிப்பதற்கான விளக்குகள், மொபைல் சார்ஜிங் வசதிகள் , சிற்றுண்டி மேசை போன்ற நவீன வசதிகளுடன் உள்ள இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயிலில் ,விபத்து தடுப்பு கவச அமைப்பும் பொருத்தப் பட்டுள்ளது.
பெர்த்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கூடுதல் குஷன் மற்றும் மேல் மற்றும் நடுத்தர பெர்த்களுக்கு எளிதாக ஏறி இறங்கும் வகையில் நவீன ஏணி ஆகியவை பயணிகளின் விருப்பம் அறிந்து உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் பொதுவான பகுதிகளில் சென்சார் அடிப்படையிலான விளக்குகளும் அமைக்கப் பட்டுள்ளன.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு பெர்த்கள் மற்றும் தானியங்கி வெளிப்புறக் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமல்லாமல், விமானத்தில் இருப்பதைப் போல பயோ கழிப்பறைகள் மற்றும் வெந்நீர் ஷவர் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தனை நவீன வசதிகளுடன் கூடிய இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், ரயில் பயணிகளுக்கு உயர்தர பயண அனுபவத்தை வழங்கும் என்று ரயில்வே உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.