சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையின் அட்டவணை வெளியாகியுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் வந்தே பாரத் ரயில், வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற 6 நாட்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், பகல் 1.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என்றும், மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எழும்பூரில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும், சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே செல்லும் வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று, மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே வந்தே பாரத் ரயில் சேவை வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், பகல் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட்டை அடையும் என்றும், மறுமார்க்கமாக, பெங்களூரு கண்டோன்மென்ட்டில் இருந்து பகல் 1.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 9.45 மணிக்கு மதுரையை சென்றடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என்றும், மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.