தற்கொலை நிரந்தர தீர்வல்ல என நீட் தேர்வில் மூன்றாம் முயற்சியில் வெற்றி பெற்று சாதனை படைத்த திருச்செந்தூர் மாணவி தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப்புரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான முனீஸ்குமாரின் மகள் பவித்ரா காயல்பட்டினத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்று நீட் தேர்வு எழுதினார். 2 முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்தாலும் மனம் தளராத மாணவி பவித்ரா, 3-வது முறையாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து அவருக்கு 7 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைத்துள்ளது. அடுத்த மாதம் பவித்ரா மருத்துவ படிப்பை தொடங்கவுள்ள நிலையில் அவருக்கு குடும்பத்தினர் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதுபற்றி பேசிய மாணவி பவித்ரா, நீட் தேர்வில் வெற்றிபெற பெற்றோர் உறுதுணையாக இருந்ததாக தெரிவித்தார். மேலும், தற்கொலை எண்ணத்தை கைவிட்டு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் எனவும் கூறினார்.