86 சதவீத வங்கதேசப் பொருளாதாரம் அந்நாட்டின் ஜவுளித்துறையை நம்பி இருக்கிறது. இந்நிலையில், எதிர்பாராத அரசியல் மாற்றம் காரணமாக வங்க தேசத்தில் ஜவுளித் துறைக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அது குறித்து ஒரு செய்தி தொகுப்பு.
தெற்காசியாவில் மிகப்பெரிய ஆடை உற்பத்தித் துறையைக் கொண்ட நாடாக வங்க தேசம் உள்ளது. வங்கதேசத்தின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ஜவுளித் துறையால் ஏற்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக உலகின் இரண்டாவது பெரிய ஆடை உற்பத்தியாளராக வங்க தேசம் இருந்து வருகிறது. வங்க தேசத்தின் ஜவுளித் துறையில் சுமார் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேலை செய்து வருகிறார்கள். அதே நேரத்தில் பன்னிரெண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு ஜவுளித்துறையையே நம்பி இருக்கிறார்கள்.
வங்கதேசத்தில் மொத்தமுள்ள 4,500 ஆடைத் தொழிற்சாலைகளில், 80 சதவீத ஜவுளித் தொழிலாளர்கள் பெண்களாக உள்ளனர். அதிலும் 16 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்கள் சதவீதம் 15 ஆகும்.
H&M, Zara மற்றும் Gap உள்ளிட்ட சிறந்த பிராண்டுகள் அனைத்தும் வங்க தேசத்தில் தான் உற்பத்தி செய்யப் பட்டு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. வங்க தேசத்தின் மொத்த ஏற்றுமதியில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 84 சதவீதமாகும்.
2001ம் ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த வங்க தேசத்தின் ஏற்றுமதி 2023ம் ஆண்டு கிட்டத்தட்ட 40 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. .
இந்த வளர்ச்சி , வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் ஏற்பட்டதாக சர்வதேச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்தமாக 20 ஆண்டுகள் வங்க தேசத்தை வழி நடத்திய ஷேக் ஹசீனா, ஏழ்மை நிறைந்த நாடு என்ற நிலையில் இருந்த வங்க தேசத்தின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றார் என்று பாரட்டப் படுகிறார்.
கடந்த பத்தாண்டுகளில் வங்க தேசத்தின் தனிநபர் வருமானம் மும்மடங்கு அதிகரித்துள்ளது என்றும், கடந்த 20 ஆண்டுகளில் இரண்டரைக் கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப் பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
ஷேக் ஹசீனாவின் அரசு, ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவுடன் வலிமையான வர்த்தக உறவுகளை ஏற்படுத்தி இருந்ததாலும், பாலங்கள் உட்பட நாட்டின் உள்கட்டமைப்பு அதிகரிக்கப்பட்டதாலும் நாட்டின் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்திருந்தது என்றும் கூறப் படுகிறது.
வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து, வன்முறையாக மாறிய காரணத்தால், ஹேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த நாட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார். இதனால் தற்போது வங்க தேசத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பம் என்பது சர்வதேச முதலீட்டாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜவுளித் தொழில், வெளிநாட்டு முதலீடு மற்றும் சர்வதேச வர்த்தகத்தை நம்பியிருப்பதால், வங்கதேசம் மீது நம்பிக்கை குறைந்திருக்கிறது என்று சர்வதேச பிராண்டுகள் தெரிவிக்கின்றன.இது ஜவுளித் துறையின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருந்த அந்நிய நேரடி முதலீட்டில் (FDI) சரிவை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.
பல தொழிலாளர் சீர்திருத்தங்களை அமல்படுத்திய ஷேக் ஹசீனாவின் அரசு இப்போது இல்லை. எனவே, தொழிலாளர்களுக்கும் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. தொழிலாளர்கள் போராட்டம் என்று வந்தால், அது உற்பத்தி அட்டவணையை சீர்குலைத்துவிடும் என்றும், சர்வதேச ஆர்டர்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுத்தும் என்றும் அதனால் நம்பகமான ஏற்றுமதியாளர் என்ற வங்கதேசத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி, எதிர்காலத்தை எதிர்கொள்ளும் நிலையில், அனைத்து இந்திய ஜவுளி தொழில்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்திய தொழில் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்துக்கு அதிக அளவு பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா என்பது குறிப்பிடத் தக்கது.