கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை தாக்கி மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை அடுத்த குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கடந்த 24 ஆம் தேதி நாகை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
கோடியக்கரை தென்கிழக்கே 8 நாட்டில்கள் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது பைபர் படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் மீனவர்களிடம் நலம் விசாரிப்பது போல் நடித்து, பட்டா கத்தியுடன் படகில் ஏறி உள்ளனர்.
அப்போது மீனவர்களை தாக்கி, பைபர் படகின் 2 இன்ஜின்கள், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை திருடி சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் சக மீனவர்களின் உதவியுடன் கரை திரும்பினர். நாகை துறைமுகம் வந்த 4 மீனவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.