அமெரிக்காவில் உள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 27ஆம் தேதி அமெரிக்கா பயணம் மேற்கொண்டார்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை சென்றடைந்த அவர், முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றார். தமிழகத்தில் 4 ஆயிரத்து 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 900 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
3 நிறுவனங்களின் உயரதிகாரிகள், பிரதிநிதிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உள்ளார். அதில், ஆசியாவின் வளர்ச்சி இயந்திரங்களில் ஒன்றாக தமிழகம் முன்னணியில் திகழும் வகையில், பல்வேறு வாய்ப்புகளையும் மற்றும் வணிக ஒப்பந்தங்களையும் வலுப்படுத்தும் முடிவுடன் செயல்படுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.