சென்னை எம்.ஜி.ஆர்.சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நடைபெற்ற, மூன்று வந்தே பாரத் இரயில்களின் பயணத்தை துவக்கி வைக்கும் நிகழ்வில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். தமிழகத்தின் தென்மாவட்ட மக்கள் பயனடையும் வகையில், தலைநகர் சென்னையில் இருந்து நாகர்கோவில் பகுதியை இணைக்கின்ற விதமாக, 20627/20628 எண் கொண்ட இரயில் தனது பயணத்தை இன்று முதல் துவங்குகிறது.
மேலும், தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில்நகரமாக விளங்கக்கூடிய கர்நாடக மாநிலம் பெங்களூரையும், தமிழகத்தின் கோவில் நகரமான மதுரை மாநகரையும் இணைக்கின்ற வகையில் 20671/20672 எண் கொண்ட இரயில் பயணிக்க உள்ளது.
தமிழகத்தில் முன்பே 6 வந்தே பாரத் இரயில்கள் இயங்கி வரும் நிலையில், தற்போது துவங்கப்பட்டிருக்கும் 2 இரயில்களோடு சேர்த்து 8 வந்தே பாரத் இரயில்கள் தமிழகத்தில் இனி இயக்கத்தில் இருக்கும்.
மேலும், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முக்கிய நகரங்களான மீரட் மற்றும் லக்னோ பகுதிகளை இணைக்கின்ற வகையிலான 22489/22490 எண் கொண்ட இரயிலும் இன்று துவக்கி வைக்கப்பட்டது.
காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த துவக்க விழாவில் தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி , முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளர்.