ஆந்திர பிரதேச மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக 8 பேர் உயிரிழந்தனர்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. விஜயவாடா ராம கிருஷ்ணாபுரம் பகுதியில் ஏராளமான வீடுகள் மற்றும் கார்கள் வெள்ளத்தில் மூழ்கின.
தாழ்வான பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியதால் அப்பகுதிகளில் வசித்துவந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
கடலோர மாநிலங்களில் கனமழை ஏற்படும் அபாயம் உள்ளதால் தெலங்கானா மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.