ஹுருன் இந்தியா வெளியிட்ட இந்த ஆண்டுக்கான ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். இதுவரை முதலிடத்திலிருந்த முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்துக்குச் சென்றிருக்கிறார். இந்த பட்டியல் தவறானது என்றும் முகேஷ் அம்பானி தான் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்று பெருமையைப் பெறுகிறார் என்று ஃபோர்ப்ஸ் மற்றும் ப்ளூம்பெர்க் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆண்டுதோறும் ஹுருன் இந்தியா, கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2024ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி தரவுகளின் படி ஒருவரின் சொத்து மதிப்பு கணக்கிடப் பட்டு இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதன்படி 62 வயதான கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர், நாட்டின் முதல் பணக்காரர் அடையாளத்தைப் பெறுகிறார். அவரின் சொத்து மதிப்பு 11.6 லட்சம் கோடி ரூபாயாகும்.
2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளிவந்த ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பின் அதானி இழந்த மதிப்பிடப்பட்ட சொத்துக்களில் 95 சதவீதத்தை மீண்டும் ஓராண்டுக்குள் திரும்ப பெற்றதாக ஹுருன் அறிக்கை தெரிவிக்கிறது.
ஆனால் ஹுருன் அறிக்கைக்கு நேர் மாறாக ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் பணக்காரராக முகேஷ் அம்பானி இருக்கிறார். அவர் 117.1 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலகளவில் 12வது இடத்தில் இருப்பதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையின் மதிப்பீட்டில் , அதானி, 81.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் பின்தங்கி இருக்கிறார்.
அதே போல் ப்ளூம்பெர்க்கின் எண்ணிக்கையும் வேறுபடுகிறது. ப்ளூம்பெர்க் அறிக்கையில் முகேஷ் அம்பானி உலக அளவில் 11வது இடத்திலும் , அதானி உலகளவில் 15வது இடத்திலும் உள்ளனர்.
ஏற்கெனவே முதலிடத்தில் இருந்து வந்த ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி 10.1 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 3.14 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளாக கௌதம் அதானி ,முகேஷ் அம்பானி, ஷிவ் நாடார்,சைரஸ்.எஸ்.பூனாவாலா, கோபிசந்த் ஹிந்துஜா, ராதாகிஷன் தமனி ஆகிய 6 இந்திய தொழில் அதிபர்களும் தொடர்ந்து பணக்காரர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் இப்போது 334 பில்லியனர்கள் உள்ளனர் என்று தெரிவித்திருக்கும் ஹுருன் அறிக்கை 13 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட ஆறு மடங்கு அதிகம் என்று கூறுகிறது. ஆனால், ஃபோர்ப்ஸ் பட்டியல் இந்தியாவில் 200 பில்லியனர்கள் இருப்பதாக சொல்கிறது.
ஹுருன் பட்டியலில் இந்த முறை நிறைய புதுமுகங்களும் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக Zepto நிறுவனர்கள் கைவல்யா வோஹ்ரா 3,600 கோடி ரூபாய் மதிப்புடனும், Zepto பங்குதாரரான ஆடித் பாலிச்சா 4,300 கோடி ரூபாய் மதிப்புடனும் பணக்காரர் பட்டியலில் மிக இளைய வயதில் இடம்பெற்றுள்ளனர்.
தொடங்கப்பட்ட 3 ஆண்டுகளுக்குள் இந்த உயரத்தை Zepto நிறுவனர் அடைந்துள்ளது சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்தி திரைப்பட நடிகர் ஷாருக்கானும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.