உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்துடன் போராடும் தென் கொரியா, கடுமையான குழந்தை பராமரிப்பு பற்றாக்குறையை சரி செய்ய ஃபிலிப்பைன்ஸ் குழந்தை பாரமரிப்பாளர்களை நாட்டிற்குள் அனுமதிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலக அளவில் வளர்ந்த நாடுகளில் பிறப்பு விகிதங்கள் குறைந்து வருகின்றன. ஆனால் எதுவுமே தென் கொரியா போல இவ்வளவு மோசமாக இல்லை.
தென் கொரியா உலகிலேயே மிகக் குறைவான பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. மேலும் அந்த விகிதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆண்டுதோறும் இந்த வீழ்ச்சி அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது.
2023ம் ஆண்டில் மேலும் 8 சதவீதம் குறைந்து தென்கொரியாவில் பிறப்பு விகிதம் 0.72 சதவீதமாக உள்ளதாக தென்கொரிய அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலை தொடர்ந்தால், தென் கொரியாவில், 2100 ஆம் ஆண்டுக்குள் மக்கள்தொகை பாதியாகக் குறையும் என்றும், அடுத்த 50 ஆண்டுகளில் உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை பாதியாகக் குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சனையை சமாளிக்க தென் கொரிய அரசு, கடந்த 20 ஆண்டுகளில் 28,600 கோடி ரூபாய்க்கும் மேல் செலவளித்துள்ளது.
குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு பரிசுத் தொகை, மாதந்தோறும் பணச்சலுகை, மானிய விலையில் வீடுகள், இலவச டாக்சிகள், திருமணமானவர்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சை மற்றும் குழந்தைப் பெற்றுக் கொள்ள IVF சிகிச்சைக்கான பணம் என்று பல வசதிகளை செய்து தருகின்றன. ஆனால் இத்தகைய நிதிச்சலுகை எதுவும் பெரிதாக பலனளிக்கவில்லை.
தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் அரசு, இந்தப் போக்கை மாற்றியமைக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதை அங்கீகரித்துள்ளது.
எனவே தென்கிழக்கு ஆசியாவிலிருந்து ஆயாக்களை பணியமர்த்துவது,30 வயதிற்குள் மூன்று குழந்தைகள் இருந்தால் கட்டாய ராணுவச் சேவையில் இருந்து ஆண்களுக்கு விலக்கு அளிப்பது போன்ற ஆக்கப்பூர்வமான முடிவுகளை தென்கொரிய அரசு எடுத்திருக்கிறது.
அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றுதான் வெளிநாட்டு ஆயாக்களை நாட்டில் அனுமதிப்பதாகும். தென் கொரிய பெற்றோரின் குழந்தைப் பராமரிப்புச் சுமையைக் குறைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
முதல் கட்டமாக,100 பிலிப்பைன்ஸ் ஆயாக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 2025 ஆம் ஆண்டு ஜூனுக்குள் சுமார் 1,200 வெளிநாட்டு ஆயாக்கள் தென்கொரியாவில் பணியில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் அரசிடமிருந்து CARE GIVING NATIONAL கேர்கிவிங் நேஷனல் தரும் இரண்டாம் நிலை சான்றிதழ் பெற்ற 24 முதல் 38 வயதுக்குட்பட்ட இந்த ஆயாக்கள் E-9 விசாவின் கீழ் பணிபுரிவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆறு மாத திட்டம், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், ஒற்றைப் பெற்றோர் மற்றும் பல குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு மலிவு விலையில் குழந்தை பராமரிப்பு சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அவர்களின் பெற்றோரின் வருமான நிலைகளைப் பொருட்படுத்தாமல் குடும்பங்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் இளைய குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்ல திட்டமாக இருந்தாலும், பிலிப்பைன்ஸ் ஆயாக்களை பணியமர்த்துவதில் தென் கொரிய பெற்றோர்களுக்குப் பெரும் சிக்கல் என்று தெரிய வருகிறது.
அதாவது, வெளிநாட்டு ஆயாவுக்கு கொடுக்கும் சம்பளப் பணம் என்பது, சராசரி தென்கொரிய குடும்பங்களின் மாத வருமானத்தில் பாதியாக இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
இந்த வெளிநாட்டு ஆயா திட்டம், வெளிநாட்டு தொழிலாளர்களின் உரிமைகளை மீறுவதாகவும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தரத்தை மீறுவதாகவும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் விமர்சனம் செய்துள்ளன.
ஆனாலும், இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று தென் கொரிய தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.