சமோசா விற்பனை செய்துகொண்டு நீட் தேர்வில் 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ள உத்தரபிரதேச மாணவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நொய்டாவை சேர்ந்த சன்னிகுமார் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். படிக்கும்போதே வறுமையின் காரணமாக, மாலை நேரத்தில் சமோசா கடை வைத்து விற்பனை செய்து வந்த இவர் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில் மருத்துவ படிப்பில் ஆர்வம் கொண்ட சன்னிகுமார், நீட் தேர்வுக்கு தம்மை தயார்ப்படுத்தி வந்துள்ளார். மாலை நேரத்தில் சமோசா விற்பனை, இரவு முழுவதும் படிப்பு என கடுமையாக உழைத்த சன்னிகுமார், நீட் தேர்வில் 664 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சன்னிகுமார், சமோசா விற்பனை தமது படிப்பை பாதிக்கவில்லை என்றும், மருத்துவம் படித்துக்கொண்டே சமோசா விற்பனை செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.
இதுதொடர்பான வீடியோ வைரலானதையடுத்து இதனைக் கண்ட PHYSICS WALLAH என்ற நீட் தேர்வு பயிற்சி மைய தலைமை செயல் அதிகாரியான அலேக் பாண்டே, சன்னிகுமாருக்கு மருத்துவக் கல்லூரி கட்டணமாக 6 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.