அழகான மற்றும் சக்திவாய்ந்த தமிழ் மொழியை கற்று கொண்டு வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை, அரும்பாக்கத்தில் தமிழ்நாடு இந்தி சாகித்திய அகாடமி மற்றும் டிஜி வைஷ்ணவ் கல்லூரி இணைந்து உலக அரங்கில் இந்தியா என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் நடத்தியது. இதில் ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
இதனைதொடர்ந்து உரையாற்றிய அவர், தாம் தமிழ் பத்திரிகைகளை வாசிப்பதாகவும், யாராவது தமிழில் பேசினால் புரிந்து கொள்வதாகவும் கூறியுள்ளார். அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ் மொழியை எடுத்து செல்ல வேண்டுமெனவும், அழகான மற்றும் சக்திவாய்ந்த தமிழை கற்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்து வெளியேறியுள்ளதாகவும், 2047இல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்றால், இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு போராட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அமைதி, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உலகத்துக்காக “யாதும் ஊரே யாவரும் கேளிர்” (#வசுதைவகுடும்பகம்) என்ற சனாதன கலாசாரத்தை நிலைநிறுத்தி, வலிமையான மற்றும் சுயசார்பு பாரதத்துக்கு பங்களிப்பை வழங்கக் கூடிய தொலைநோக்குப் பார்வையுடன் இளைஞர்கள் தங்கள் துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.