போக்சோ சட்டத்தில் கைதான அரசு மருத்துவரை பணியிடை நீக்கம் செய்ய இருப்பதாக திருச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
திருச்சி மேலப்புதூரில் உள்ள பள்ளி விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அன்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சாம்சன் டேனியல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.
சாம்சன் டேனியலுக்கு உடந்தையாக இருந்த அவரது தாயாரும், பள்ளியின் தலைமை ஆசிரியருமான கிரேஸ் சகாயராணியும் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரையும், மூன்று நாள் நீதிமன்ற காவலில் வைக்க மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார்.
இந்நிலையில், அரசு மருத்துவரான சாம்சன் டேனியல் கைது செய்யப்பட்டு இருப்பதால், சட்டப்படி அவரை பணியிடை நீக்கம் செய்ய இருப்பதாக, திருச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.