நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை, இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துக் கொண்டதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகர் மற்றும் உறவினர் செல்வராஜ் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எம்.ஆர்.சேகரை, இரண்டு நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.