வேலூர் அருகே பச்சிளம் குழந்தை கொன்று புதைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தந்தையே குழந்தையை கொன்றது தெரியவந்துள்ளது.
வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த பொம்மன்குட்டை பகுதியை சேர்ந்த சேட்டு – டயானா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி 2வது ஆக பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 8 நாட்கள் ஆன நிலையில், கடந்த 4ஆம் தேதி பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாக கூறி, வீட்டிற்கு பின்னால் யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளனர்.
பச்சிளம் குழந்தை மரணத்தில் சந்தேகமடைந்த டயானாவின் தந்தை, குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், தலைமறைவாக இருந்த பெற்றோரை தேடி வந்தனர்.
இந்நிலையில், பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து குழந்தையின் தந்தை சேட்டுவிடம் போலீசார் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த தயாராக இருந்ததாகவும், ஆனால் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் குழந்தைக்கு எருக்கன் பாலை ஊற்றி கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.