விநாயகர் சதுர்த்தியையொட்டி ஊர்வலங்கள் CCTV கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக காவல் துறை தலைமை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் கொண்டாட தமிழக காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அமைதி மற்றும் ஒழுங்கை பராமரிக்க 64 ஆயிரத்து 217 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், சிலைகள் கரைப்பதில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும், சிலை கரைப்பு ஊர்வலங்கள் CCTV கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சிலைகள் நிறுவுதல் மற்றும் அவற்றை கரைத்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள நிபந்தனைகளை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.