பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றுவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 28-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4 ஆயிரத்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்த தொடரில் இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 17வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், 12 நாட்கள் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங் மற்றும் தடகள வீராங்கனை பிரீத்தி பால் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.