வருங்காலத்தில் விண்வெளியிலும் போர் நடக்கக் கூடும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவர் சமீர் வி.காமத் தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்பெல்லாம் நிலம், ஆகாயம் மற்றும் கடல் வழியாக நடைபெற்று வந்த போர், தற்போது இணையம், தகவல்தொடர்பு, விண்வெளித் துறையை எட்டிவிட்டதாக தெரிவித்தார்.
இந்த மூன்று துறையிலும் நிபுணத்துவம் பெற்ற நாடுதான் எதிர்காலத்தில் சிறந்து விளங்கும் என்றும், இதைக் கருத்தில் கொண்டு விண்வெளித் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களை புகுத்தி திறனை மேம்படுத்த வேண்டும் என்றும் சமீர் வி.காமத் தெரிவித்தார்.
புதிய விண்வெளி கொள்கை அறிவிக்கப்பட்ட பின்னர், இந்தத் துறையில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்பட்டு, நாட்டின் தேவைகள் குறுகிய காலத்தில் பூர்த்தி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.