கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் 3,000 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக, தனது பங்குகளில் 10 சதவீதத்தை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய விமானப் போக்குவரத்தில் பயணிகளால் மிகவும் விரும்பப்படும் விமான நிறுவனமாக இருந்து வந்தது ஸ்பைஸ்ஜெட்.
கொரொனா நோய் பரவல், எரிபொருள் விலை உயர்வு மற்றும் போயிங் 737 மேக்ஸ் விமானங்களின் விபத்துக்கள் ஆகியவை காரணமாக ஸ்பைஸ்ஜெட் சரிவைக் கண்டு வருகிறது.
தற்போது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) மற்றும் டெல்லி விமான நிலைய ஆபரேட்டர் டெல்லி சர்வதேச விமான நிலையம் ஆகியோரின் கோபத்துக்கு ஆளாகியுள்ளது.
உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி அதிகமாகி இருக்கும் சூழலில் ஸ்பைஸ் ஜெட் தனது சந்தைப் பங்கில் கடும் சரிவைக் கண்டுள்ளது. வெறும் 3.8 சதவீத சந்தைப் பங்கை வைத்திருக்கும் ஸ்பைஸ் ஜெட் 2019ம் ஆண்டில் 74 விமானச் சேவைகளை வைத்திருந்தது. அதுவும் இந்த ஆண்டு 28 விமானச் சேவைகளாக குறைந்துள்ளது.
2024ம் ஆண்டு முதல் காலாண்டில், ஸ்பைஸ்ஜெட்டின் நிகர லாபம் 20 சதவீதம் சரிந்து 158 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 198 கோடி ரூபாயாக இருந்தது.
இதற்கிடையில் , நிலுவையில் உள்ள குத்தகைதாரர், பொறியியல் மற்றும் EDC கடன்கள் என்ற வகையில் 3,700 கோடி ரூபாய் கடன் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 650 கோடி ரூபாய் சட்டப்படி நிலுவையில் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், விரிவாக்கத் திட்டங்களைச் செயல்படுத்தவும், செயல்பாட்டுத் திறன்களை அதிகரிக்கவும், நிலுவையில் உள்ள நிதி சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவும், கடந்த சில மாதங்களாகவே நிதி திரட்ட முயற்சி செய்து வந்தது.
ஏற்ககெனவே, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் ரூ. 2,000 கோடியை திரட்டுவதற்கான திட்டங்களை அறிவித்த ஸ்பைஸ் ஜெட், பிற விமானங்களைக் குத்தகைக்கு எடுத்து நிறுவனத்தின் வணிகத் திறனை விரிவாக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தது .
நிறுவனத்திற்கு மீட்பு நடவடிக்கைகளுக்கு பணம் தேவைப்படும் நிலையில் நிதி திரட்டும் முயற்சிகள் தோல்வியடைந்தன. விமானக் குத்தகைதாரர்கள் உட்பட விற்பனையாளர்களுக்கு பணம் செலுத்தத் தவறிவிட்ட காரணத்தால் அவர்களில் சிலர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைத் திவாலானதாக அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், தகுதிவாய்ந்த நிறுவன வேலை வாய்ப்பு மூலம் 3,000 கோடி ரூபாய் திரட்டுவதற்கான முயற்சியை எடுத்திருக்கிறது. இந்த நிதி திரட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத் தலைவர் அஜய் சிங் தனது பங்குகளில் 10 சதவீதத்தை விற்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சியில், சிங்கப்பூர், மும்பை மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நிதி மையங்களில் ஸ்பைஸ்ஜெட் தொடர்ச்சியான ROAD SHOW-நிகழ்ச்சிகளை தொடங்கவுள்ளது.
வரும் மாதங்களில் 60 புதிய விமானங்களை அறிமுகப்படுத்துவதோடு, பிரபலமான வழித்தடங்கள் மற்றும் குறைவான சேவைகள் என்ற வகையில் விமானச் சேவையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.